உத்திரபிரதேசம் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் திருக்கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவில் மலைப் பிரதேசத்தில் இருப்பதால் ஹெலிகாப்டர் சேவை இருக்கிறது. அதன் பிறகு நேற்று முன்தினம் கோவிலில் இருந்து திரும்பிய ஹெலிகாப்டர் விபத்தில் 7 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பக்தர்களும் அடங்குவர். இந்த விபத்தில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை கிர்த்தி பராத்தும் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த ஆசிரியை தன்னுடைய 30-வது பிறந்த நாளை நேற்று முன்தினம் கொண்டாடிய நிலையில் பிறந்த நாள் அன்றே விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதோடு கிரித்தி தன்னுடைய பெற்றோருக்கு ஒரே மகள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் உர்வி பராத் என்ற பெண்மணியும் விபத்தில் உயிரிழந்துள்ளார். இவர் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக உர்வியின் தந்தை ஒரு சாலை விபத்தில் உயிரிழந்ததால், 4 பேர் கொண்ட தன்னுடைய குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபராக உர்வி மட்டும் இருந்துள்ளார். இதனையடுத்து விபத்தில் உயிர் இழந்த பூர்வா என்ற பெண் கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துவிட்டு தன்னுடைய வாழ்க்கையை கனடாவில் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்துள்ளார்.
ஆனால் அவருடைய கனவு நினைவாவதற்கு முன்பாகவே ஹெலிகாப்டர் விபத்தில் பரிதாபமாக உயிர் இழந்தார். இதைத்தொடர்ந்து ஹெலிகாப்டரை ஓட்டிய கேப்டன் அனில் சிங் மும்பையைச் சேர்ந்தவர். இவர் ராணுவத்தில் சுமார் 15 வருடங்கள் பணிபுரிந்துள்ளார். இவர் ராணுவத்தில் கடல் பகுதியில் இரட்டை எஞ்சின் ஹெலிகாப்டரை இயக்கிய நிலையில் தற்போது ஒற்றை எஞ்சின் கொண்ட ஹெலிகாப்டரை ஓட்டிய நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் உடல் நலம் சரியில்லாத ஒரே ஒரு மகள் மட்டும் இருக்கிறார்கள்.
இந்நிலையில் விபத்துக்கு மோசமான காலநிலை தான் காரணம் என்று கூறப்பட்டாலும் விதிமீறல்கள் தான் விபத்துக்கு முக்கிய காரணம் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 2000 அடி உயரத்துக்கு குறைவாக ஹெலிகாப்டரை இயக்கக் கூடாது என பசுமை தீர்ப்பாயம் உத்தரகாண்ட் அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில் அந்த உத்தரவை காற்றில் பறக்க விட்டு ஹெலிகாப்டரை இயக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு முறை கடுமையான இரைச்சலுடன் ஹெலிகாப்டர்கள் பறந்து செல்வதாக கோவிலுக்கு அருகே இருக்கும் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.