மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவினுடைய மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தினுடைய அறிக்கை என்பது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அது சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு அந்த அறிக்கை என்பது தகவலாக வெளிவந்து கொண்டிருக்கிறது. பல்வேறு மர்மங்களுக்கு இதில் ஒரு வெளிச்சம் கிடைத்திருப்பதாக அறிய முடிகிறது. ஜெயலலிதாவுக்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படாதது முதல் அவருடைய மரண தேதியில் முரண்பாடு இருப்பது வரை பல்வேறு அதிர்ச்சியான தகவல்கள் அந்த ஆணையத்தின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
மேலும் தேவைப்பட்டால் சி விஜயபாஸ்கர், அப்போதைய துணைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன்,சசிகலா, மருத்துவர் சிவகுமார் ஆகியோரை விசாரிக்கலாம் என்று ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைந்துள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவரை அருகில் யாரையும் விடாமல் பக்கத்தில் இருந்து கவனித்துக் கொண்டவர் சசிகலா என்பதனால் அவர் மீது பல தரப்பிலும் சந்தேகம் இருந்து வந்தது. இப்போது ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு விஷயங்கள் சசிகலா மீது சந்தேகத்தை ஏற்படுத்த விதமாக அமைந்திருந்ததால் சசிகலாவிற்கு தற்போது சிக்கல் எழுந்துள்ளது.
இந்த நிலையில் ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்திருப்பது, தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், அம்மா… புரட்சித் தலைவி… என்று கூறிவந்த இபிஎஸ், ஓபிஎஸ் இதுவரை இதைப் பற்றி எந்த ஒரு அறிக்கையும் வெளியிடாமல் இருப்பது, அதிமுக தொண்டர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் உட்கட்சி மோதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர்களுக்கு, இது தெரியவில்லையா என்பதே அவர்களின் கேள்வி.