கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் திலீப் (27) என்பவர் தன்னுடைய மனைவியுடன் வசித்து வருகிறார். இவருடைய மனைவி கடன் பிரச்சனை காரணமாக வீட்டின் அருகே உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார். இது திலீப்புக்கு சுத்தமாக பிடிக்காததால் மனைவியை வேலைக்கு செல்லக்கூடாது எனக் கூறியுள்ளார். ஆனால் அதற்கு அவருடைய மனைவி மறுப்பு தெரிவித்து கடனை அடைக்கும் வரை தான் வேலைக்கு செல்வேன் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த திலீப் தன்னுடைய காதல் மனைவியை கொடூரமான முறையில் தாக்கி அதை செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கணவன் தாக்கியதில் முகம் முழுவதும் ரத்த காயத்துடன் மனைவி காவல் நிலையத்தில் திலீப் மீது புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் தன்னுடைய கணவன் வேலைக்கு செல்லாமல் தினந்தோறும் குடித்துவிட்டு வீட்டு செலவுக்கு பணம் தராமல் தன்னை சித்திரவதை செய்வதாக கூறியுள்ளார். அந்தப் புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திலீப்பை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் திலீப்பின் மனைவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.