Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : தகுதிச்சுற்று….. “வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இலங்கை”…. இன்று நெதர்லாந்துடன் மோதல்..!!

டி20 உலகக் கோப்பையின் 9வது தகுதிச்சுற்று போட்டியில் நெதர்லாந்து – இலங்கை அணிகள் மோதுகிறது.

2022 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையின் 9வது தகுதிச்சுற்று போட்டியில் நெதர்லாந்து அணியுடன் இலங்கை இன்று இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு மோதவுள்ளது.. நடப்பு ஆசியக் கோப்பை சாம்பியனான இலங்கை அணி  ஐக்கிய அரபுக்கு எதிராக கடந்த போட்டியில்  அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து சூப்பர் 12 கட்டத்தில் இடம்பிடிக்கும் நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருந்தனர்.

நமீபியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்த பிறகு, இலங்கை அணி தடுமாறியது. இருப்பினும், தசுன் ஷனக தலைமையிலான அணி மீண்டு வந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான தகுதி சுற்று போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது. மறுபுறம், நெதர்லாந்து அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் நமீபியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றதன் மூலம் முதலிடத்தில் இருக்கிறது. அக்டோபர் 22ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கும்  சூப்பர் 12 சுற்றில் தங்கள் இடத்தை உறுதிப்படுத்திக் கொள்ள ஆயத்தமாக உள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கெதிரான போட்டியில் இலங்கை வீரர் துஷ்மந்த சமீர பந்துவீசும் போது ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார். அவர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக 4 ஓவர் வீசி 3/15 என சிறப்பாக  செயல்பட்டு இருந்தார். அவர் விலகியிருப்பது அணிக்கு பின்னடைவாக இருக்கலாம். இதனால் இலங்கை அணியில் லஹிரு குமாரவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். இலங்கை அணி கண்டிப்பாக வென்றால் மட்டுமே சூப்பர் 12க்குள் செல்ல வாய்ப்புள்ளது. எனவே கத்துக்குட்டி அணி என நெதர்லாந்தை குறைத்து மதிப்பிடாமல் மிக தீவிரமாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே இடது கால் தசை கிழிந்ததால் வெளியேறியுள்ள சமீராவுக்கு பதிலாக கசுன் ராஜிதா  சேர்க்கப்பட்டுள்ளார். ராஜித தற்போது இலங்கையில் இருப்பதால் விரைவில் அவுஸ்திரேலியா செல்லவுள்ளார். இடது தொடை கிழிந்துள்ள தனுஷ்க குணதிலக்கவுக்குப் பதிலாக அஷேன் பண்டாரா பயணிக்கும் ரிசர்வ் அணியில் சேர்க்கப்படுவார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

சாத்தியமான இலங்கை லெவன் : பதும்நிசாங்கா, குசல் மெண்டிஸ் (Wk), தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, பானுக ராஜபக்ச, தசுன் ஷனக (கே), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, லஹிரு குமார, பிரமோத் மதுஷன், மஹீஷ் தீக்ஷன.

சாத்தியமான  நெதர்லாந்து லெவன் :  விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடோவ்ட், பாஸ் டி லீட், கொயில்ன் அக்கர்மேன், டாம் கூப்பர், ஸ்காட் எட்வர்ட்ஸ் கே), ரோலோஃப் வான் டெர் மெர்வே, டிம் பிரிங்கிள், லோகன் வான் பீக், ஃப்ரெட் கிளாசென், பால் வான் மீகெரென்

2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் தகுதிச் சுற்றில் மொத்தம் 12 போட்டிகள் நடைபெறும். குரூப் ஏ அணிகள் குழுவில் உள்ள மற்ற அணிகளுடன் ஒரு போட்டியில் விளையாடும். இதேபோல், குரூப் பி அணிகள் குழுவின் மற்ற அணிகளுடன் தலா ஒன்று விளையாடும்.

ஒவ்வொரு குழுவிலும் 4 அணிகள் இருப்பதால், தகுதிச் சுற்றில் ஒவ்வொரு அணியும் 3 போட்டிகளில் விளையாடும். தகுதிச் சுற்று முடிவில் குரூப் ஏ மற்றும் குரூப் பி புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும். சூப்பர் 12 சுற்றில் இரண்டு அணிகள் குரூப் 1 இல் சேரும், மற்ற 2 அணிகள் குரூப் 2 இல் சேரும்.

தகுதிச்சுற்று புள்ளிப்பட்டியல் :

Categories

Tech |