தமிழக சட்டப்பேரவையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை மற்றும் அம்மா ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் அருணா ஜெகதீசன் ஆணையம் சமர்ப்பித்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஓடிக் கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது எனவும், துப்பாக்கிசூடு குறித்த எந்த ஒரு முன்னெச்சரிக்கை அறிவிப்பும் வெளியிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கி சூடு விவகாரத்தில் 17 காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. அதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 10 லட்ச ரூபாயும் நிதி உதவியாக வழங்க வேண்டும் எனவும் ஆணையம் தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி துப்பாக்கி சூடு சம்பவத்தை நான் டிவியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று கூறினார்.
சட்டப்பேரவையில் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின் கேட்போரின் ரத்தம் உறைய வைக்கும் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து டிவியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுவது கிராமத்து பக்கம் கடப்பாரையை விழுங்கிவிட்டு கசாயம் குடித்துவிட்டேன் என்று கூறுவது போல் இருக்கிறது.
அதிமுக அரசின் ஆட்சியில் 13 உயிர்கள் அநியாயமாக பலியாகியுள்ளது. நான் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஏற்கனவே கூறியிருந்தது போல் துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடையவர் களுக்கு கண்டிப்பாக தக்க தண்டனை வழங்கப்படும் என்றார். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி துப்பாக்கி சூடு சம்பவத்தை டிவியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று கூறியதற்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அறிக்கையில் காவல்துறை ஆணையாளர்கள் ஒவ்வொரு நொடியும் எடப்பாடி பழனிச்சாமிக்கு தகவல் தெரிவித்ததாக கூறியுள்ளனர். இப்படிப்பட்ட உண்மை சம்பவங்கள் வெளிவந்துதன் காரணமாகத்தான் அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் சபையை புறக்கணித்துவிட்டு, கலவர நாடகத்தை நடத்தி வெளியேறியுள்ளனர் என்று கூறியுள்ளார்.