ஹாலிவுட்டில் நடனத்தை அடிப்படையாக கொண்ட படங்கள், வெப் தொடர்கள் அதிகளவில் வெளியாகும். முதல் முறையாக நடனத்தை மையமாக கொண்டு 5678 எனும் பெயரில் வெப் தொடர் ஒன்று தயாராகி இருக்கிறது. இந்த தமிழ் ஒரிஜினல் வெப்தொடர் அடுத்த மாதம் 18ஆம் தேதி ஜீ5 தளத்தில் வெளியாகிறது. இத்தொடரை புது முகங்கள் இணைந்து உருவாக்கி இருக்கின்றனர். இதை ஏ.எல்.அழகப்பன், ஹிதேஷ் தாக்கூர் தயாரித்து இருக்கின்றனர். அதில் செம்பா, விக்ரம், தினேஷ் மற்றும் ஸ்வேதா நடித்து இருக்கின்றனர். சமூகத்தின் அடிதட்டில் உள்ள இளைஞர்கள் இணைந்து ஒரு நடன குழுவை உருவாக்குகின்றனர். திறமை இருந்தும் அதற்குரிய வாய்ப்பை பெறுவது எப்படி என தெரியாமல் தவிக்கின்றனர்.
பணக்காரர்கள் எளிதில் வெற்றிபெற முடிகிற ஒரு தளத்தில் இவர்கள் எப்படி போராடி வெற்றி பெறுகின்றனர் என்பதுதான் இந்த தொடரின் கதை ஆகும். இது தொடர்பாக இயக்குனர் விஜய் கூறியிருப்பதாவது “இளமை நிறைந்த மற்றும் திறமைமிக்க நடிகர்களுடன் இணைந்து பணிபுரிந்தது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. இத்தொடரின் படப்பிடிப்பின்போது சுதந்திர மனப்பான்மை கொண்ட இந்த இளைஞர்கள் நிறைந்த உத்வேகத்துடன் மிகக் கடுமையான உழைப்பை வழங்கினர். இந்த தொடர் உலகெங்கிலும் உள்ள 190 நாடுகளின் பார்வையாளர்களை சென்றடைந்து அவர்களின் உள்ளத்தில் இடம்பிடிக்கப் போகிறது என்பது குறித்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இத்தொடரை பார்வையாளர்கள் இருகரம் நீட்டி ஏற்றுக்கொண்டு ஆதரவளிப்பார்கள் என நம்புகிறோம்” என்று அவர் கூறினார்.