கொரியாவில் நெல் கொள்முதல் விலை கடும் வீழ்ச்சி அடைந்திருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தென்கொரியாவின் வேளாண்மை உணவு மற்றும் கிராமப்புற அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அந்த நாட்டில் அரிசியின் விலை கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் இருந்ததைவிட இந்த வருடம் 24.9% குறைந்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவில் மிகப்பெரிய வீழ்ச்சி எனக் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தென்கொரியாவில் சமீபகாலமாக நெல் கொள்முதல் விலை தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது.
அதேநேரம் உற்பத்திக்கான செலவினங்கள் உயர்ந்து வருவதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். இதன் காரணமாக அந்த நாட்டில் உள்ள விவசாயிகள் செலவீடுகளை ஈடு செய்யவும் கடன்களை திருப்பி செலுத்தவும் முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே அரிசி விலையை நிலைப்படுத்த அந்த நாட்டு அரசு கடந்த வருடம் உற்பத்தியில் 20 சதவீதத்தை கொள்முதல் செய்ய முடிவு செய்திருக்கிறது. மேலும் வரும் அக்டோபர் 20ஆம் தேதி முதல் சுமார் 3 லட்சத்து 50000 டன் அரிசியை கையிருப்பில் வைக்க தென்கொரியா அரசு முடிவு செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.