குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா, கோகுல்புரி ஆகிய பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. அதே பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் சிலர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர்.
கடந்த நான்கு நாட்களாக டெல்லியில் நடைபெற வன்முறையில் உயிரிழப்பு எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து டெல்லியில் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்தை வரவழைக்க வேண்டும். காவல்துறையினாரால் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்நிலையில் இந்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. டெல்லியில் கலவரத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் ராணுவம் ஈடுப்படுத்த மாட்டாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. டெல்லியில் கலவரத்தை ஒடுக்க போதுமான அளவு துணை ராணுவப்படையினர் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதையடுத்து டெல்லியில் கலவரம் பாதித்த இடங்களில் அமைதி நிலைநாட்ட கூடுதல் துணை ராணுவப் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர்.