தீபாவளி பண்டிகை முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை அன்று காலையில் எழுந்து தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடைகள் அணிந்து பட்டாசு வெடிப்பது வழக்கம். இந்த தீபாவளியை நம்முடைய முன்னோர்கள் தீ ஒளி என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது தீமை அகன்று நன்மை பிறக்கும் நன்னாள் என்று கூறப்படுகிறது. ஒளி என்பது வெற்றியின் பொருள். இருள் என்பது தோல்வியின் பொருள் என்பதாகும். தீபாவளி பண்டிகைக்கு ஏராளமான கதைகள் உள்ளது.
அந்தவகையில் தீபாவளி பண்டிகை தீமையின் வடிவமான அசுரர்களை கடவுளின் அவதாரம் அழித்ததால் உருவானது என்கின்றன இந்து புராணங்கள். திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை துளைத்துக்கொண்டு அசுரர்களை அழிக்க சென்ற போது அவரின் ஸ்பரிசத்தால் பூமாதேவிக்கு பிறந்தவன் நரகாசுரன். அசுர வதத்தின் போது பிறந்தவன் என்பதால் அசுரபாவம் இவனுக்கு இயல்பாகவே அமைந்துவிட்டது. நரன் என்றால் மனிதன். இவன் மனிதனாக இருந்ததாலும் துர்குணங்கள் நிறைந்தவனாக இருந்ததாலும் நரகாசுரன் எனப்பட்டான். இவன் தேவர்களுக்கும் மனித குலத்திற்கும் ஏராளமான தீமைகளை செய்து வந்தான். இதை அறிந்த மகாவிஷ்ணு அவனை அழிக்க நினைத்தார்.
ஆனால் அவன் பூமி தாய்க்கு பிறந்தவன் என்பதனால் அவனை தன்னுடைய தாயைத் தவிர வேறு யாராலும் கொல்ல முடியாத வரம் பெற்று இருந்தான். எனவே மகாவிஷ்ணு போரிட்டு அழிக்க நினைத்தார். ஆனால் மகாவிஷ்ணு மீது அவன் அம்பு எய்தான். இந்த அம்புபட்டு அவர் மயக்கம் அடைவது போல கீழே விழுந்தார். இதை பார்த்து சத்தியபாமா கோபமடைந்து நரகாசுரனை போருக்கு அழைத்தார். சத்தியபாமா பூமியினுடைய அவதாரம் என்று உணராமல் அவரோடு நரகாசுரன் போர் செய்து அழிந்தான். அப்போது தான் சத்தியபாமா தன்னுடைய தாய் என்று அவனுக்கு தெரிந்தது.
அப்போது அவரிடம் அம்மா நான் மறைந்த இந்நாள் மக்கள் மனதில் இருக்க வேண்டும். என்னுடைய பிடியில் இருந்து விடுபட்ட தேவர்களும் மக்களும் இந்த நாளில் இனிப்பு வழங்கி ஒளிமயமாகக் கொண்டாட வேண்டும் என்று வணங்கினான். மகாவிஷ்ணு சத்யபாமாவும் அவனுக்கு வரம் கொடுத்தார்கள். இதயொட்டி நரகாசுரன் மறைந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாட தீபாவளி பண்டிகையை வந்ததாக கிருஷ்ணன் லீலை புராணம் கூறுகிறது.