தட்டி கேட்ட வாலிபரை அரிவாளால் வெட்டிய பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாடன்பிள்ளைதர்மம் சுடலை கோவில் மேற்கு தெருவில் தினேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிஷா(21) என்ற மனைவி உள்ளார். இவர் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் தனது மனைவியை வங்கியில் இருந்து அழைத்து வருவதற்காக தினேஷ்குமார் உறவினரின் காரில் அங்கு சென்றுள்ளார். அப்போது பிரபல ரவுடியான மணிகண்டன் என்பவர் 5 ஆயிரம் ரூபாய் கேட்டு தினேஷ் குமாரை மிரட்டியுள்ளார். மேலும் மணிகண்டன் காரின் சாவியை எடுத்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனை அடுத்து அங்கு வந்த அபிஷா சாவியை கேட்டபோது மணிகண்டன் அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இதனை இந்திரகுமார் என்ற வாலிபர் தட்டி கேட்டு வழிப்பறியை தடுத்தார். அப்போது கோபத்தில் மணிகண்டன் இந்திரகுமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த இந்திரகுமார் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மணிகண்டனை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. பலமுறை குண்டர் சட்டத்தில் கைதாகி மணிகண்டன் சிறைக்கு சென்ற வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.