Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“குமாரபாளையத்தில் அடிக்கடி நிகழும் விபத்து”….. கத்தேரி பிரிவு பைபாஸ் சாலையில் மேம்பாலம் அமைக்கப்படுமா….???

குமாரபாளையத்தில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவதால் இதனை தடுக்க கத்தேரி பிரிவு பைபாஸ் சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.

சேலம் முதல் கோவை வழியாக கேரள மாநிலம் கொச்சி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை குமாரபாளையம் வழியே செல்கின்றது. இந்த சாலை சேலம் முதல் செங்கப்பள்ளி வரை நான்கு வழிச்சாலையாகவும் செங்கப்பள்ளி முதல் கோவை வரை 6 வழிச்சாலையாகவும் இருக்கின்றது. சென்னையில் இருந்து கொச்சி துறைமுகத்திற்கு செல்கின்ற கனரக வாகனங்கள் இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். இந்த சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றது. முக்கிய வழித்தடத்தில் அமைந்திருக்கும் பெரும்பாலான நகரங்களுக்கு மேம்பாலங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது.

இந்த வகையில் குமாரபாளையத்தில் ஈரோடு, பள்ளிபாளையம் செல்லும் பாதையில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அமைக்கப்பட்டது. இரண்டு வருடங்களுக்கு முன்பு பொது மக்களின் பெரும் போராட்டத்திற்கு பின் திருச்செங்கோடு செல்லும் பாதைக்காக கோட்டைமேடு பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் குமாரபாளையத்தில் இருந்து சங்ககிரி, சேலம், சென்னை செல்வதற்கு பயணிகள் கத்தேரி பிரிவு பைபாஸ் ரோட்டை அடைந்து அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்ல வேண்டிய உள்ளது.

மேலும் சேலத்தில் இருந்து குமாரபாளையம் வருபவர்கள் கத்தேரி பிரிவு பைபாஸில் வலது புறம் திரும்பி நகருக்குள் வரவேண்டும். ஆனால் கத்தேரி பிரிவு பைபாஸ் ரோட்டில் மேம்பாலம் இல்லாத காரணத்தினால் போக்குவரத்து நெரிசல்களும் அடிக்கடி வாகன விபத்துகளும் இதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றது. ஆகையால் கத்தேரி பிரிவு பைபாஸ் சாலையில் மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |