மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள 13 அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஹிந்தி மொழியானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி முதலாம் ஆண்டு படிக்கும் மருத்துவ மாணவர்களுக்கு உயிர் வேதியியல், உடலியல், உடற்கூறியல் ஆகிய 3 பாடங்கள் ஹிந்தி மொழியில் கற்பிக்கப்பட இருக்கிறது. இதை உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இந்நிலையில் மருத்துவக் கல்லூரிகளில் ஹிந்தி மொழி அறிமுகம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் மத்திய பிரதேச மாநிலத்தில் மருத்துவ படிப்பில் ஹிந்தி மொழியானது அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இந்த நாள் இந்திய கல்வித்துறைக்கு வரலாற்று சிறப்புமிக்க நாள். அதன் பிறகு குழந்தைகள் அனைவரும் தங்கள் சொந்த மொழிகளில் படிக்கும் வகையில் இந்திய மொழிகளுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் தீர்மானத்தில் இது ஒரு முக்கியமான முடிவாகும் என்று பதிவிட்டுள்ளார்.