வயதான காலத்தில் சேமிப்பதைவிட பணியில் இருக்கும்போதே ஏதேனும் ஒரு திட்டத்தில் முதலீடு செய்து இறுதியில் பெரிய தொகையை பெற்று நிதிசிக்கல் இன்றி நிம்மதியாக வாழலாம். முதலீடு செய்வதைவிட முக்கியமானது திட்டமிடுதல் ஆகும். எங்கு முதலீடு செய்யவேண்டும், எவ்வளவு முதலீடு செய்யவேண்டும், நம்முடைய பணத்திற்கு எவ்வளவு வட்டி கிடைக்கும், நமக்கு இது பலன் தருமா என்று ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார்த்து திட்டமிட்டு பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்யவும். அதிகபட்சம் மற்றும் பாதுகாப்பான வருமானத்தை பெறுவதற்கு தபால் அலுவலகத்தின் சேமிப்புதிட்டத்தை தேர்ந்தெடுக்கலாம்.
இதனிடையில் அரசு வழங்கக்கூடிய ரெக்கரிங் திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூபாய்.100 முதல் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் முதலீடு செய்துகொள்ளலாம். இத்திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்துக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை வட்டி வழங்கப்படுகிறது. அத்துடன் இத்திட்டத்தின் முதிர்வுகாலத்தை நீங்களே தேர்ந்தெடுத்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 18 வயது முதல் பங்களிக்க துவங்கலாம். இவற்றில் அதிகபட்சம் வயது வரம்பு கிடையாது. மைனர் குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர்கள் இத்திட்டத்தில் கணக்கை துவங்கிக்கொள்ளலாம். மேலும் இந்த திட்டத்தில் பணத்தை சேமிப்பது மட்டுமல்லாது நீங்கள் கடனும் பெற்றுக் கொள்ளலாம்.
உங்கள் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் 50 சதவீத தொகையை கடனாக பெற்றுக் கொள்ளலாம். இதை 12 தவணைகளாக திருப்பி செலுத்திக்கொள்ளலாம். போஸ்ட் ஆபீஸின் ரெக்கரிங் திட்டத்தில் மாதந்தோறும் ரூபாய்.10,000 தொகையை முதலீடு செய்தால், 10 வருடங்களுக்கு பின் ரூபாய்.16 லட்சத்துக்கு மேல் கிடைக்கும். அதன்படி மாதந்தோறும் 10,000 ரூபாய் டெபாசிட் செய்யும்போது ஒரு ஆண்டில் ரூபாய்.1,20,000 கணக்கில் வரும், இத்தொகை 10 வருடங்களில் ரூபாய்.12 லட்சமாக இருக்கும். இத்திட்டத்தின் முதிர்ச்சி வட்டியானது மொத்தமாக சேர்த்து ரூபாய்.4,26,476 கிடைக்கும். 10 வருடத்தின் முதிர்வுக்கு பின் உங்களுக்கு மொத்தமாக ரூபாய்.16,26,476 கிடைக்கும்.