புதிது புதிதாக பரவும் நோய்களுக்கான காரணத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
கோயமுத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் மருந்து கொள்முதல் அதிகாரியாக முத்துமாலை ராணி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் தேவைக்கு அதிகமான மருந்துகளை கொள்முதல் செய்துள்ளார். ஆனால் அந்த மருந்துகள் அனைத்தும் காலாவதியாகிவிட்டது. இதனால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டது என இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனால் முத்துமாலை ராணி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் கூறியதாவது. நகரம் மற்றும் கிராமப்புறங்களில் அமைந்துள்ள மருத்துவமனைகளில் ஏழை மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு காலாவதியான மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. தற்போது நமது தமிழ்நாட்டில் குரங்கம்மை, கொரோனா , வைரஸ் காய்ச்சல் போன்ற பல நோய்கள் புதிது புதிதாக பரவி வருகிறது. இதற்கான காரணங்களை ஆராய்ச்சியாளர்களால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் இந்த மருந்து நிறுவனங்கள் அனைத்தும் முன்னேற்ற வழியில் மருந்துகளை பிரபலப்படுத்தி பல்லாயிரம் கோடி ரூபாய் சம்பாதிப்பதாக சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் கூட கூறியது. இந்த மருந்து நிறுவனங்கள் வேண்டுமென்றே நோய்களை பரப்புகிறதா? இல்லையா என்பதை கண்டறிய வேண்டியுள்ளது. நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் ஆரோக்கியம் என்பது அடிப்படை உரிமையாக கருதப்படுகிறது. எனவே நமது தமிழ்நாட்டில் புதிது புதிதாக நோய்கள் பரவுவதற்கான காரணங்களையும், மருந்து நிறுவனங்களின் செயல்களையும் ஆய்வு செய்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன் பிறகு இந்த வழக்கு வருகின்ற 27-ஆம் தேதி விசாரிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.