அசாம் மாநிலத்தில் உள்ள கரீம் கஞ்ச் மாவட்டத்தில் நீலம் பசார் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியைச் சேர்ந்த 2 பேரை திருட்டு வழக்கில் காவல்துறையினர் கடந்த புதன்கிழமை கைது செய்துள்ளனர். இந்த 2 கைதிகளும் என்ற நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், கைதிகளின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறையில் இருந்தபோது கைதிகளில் ஒருவரை ஒரு போலீஸ்காரர் கடுமையான சித்திரவதை செய்துள்ளார் என்று கூறினார். அதோடு அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடியை தூவி கைதியை துன்புறுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து விடுவேன் என்று கூறி மிரட்டியும் உள்ளார் என்றார்.
அப்போது திடீரென குறுக்கிட்ட நீதிபதி துன்புறுத்திய போலீஸ்காரர் இங்கு இருக்கிறாரா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பாதிக்கப்பட்ட கைதி ஆம் என்று கூறி துன்புறுத்திய போலீஸ்காரரை கை நீட்டினார். இதனையடுத்து போலீஸ்காரரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தான் செய்த குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார். எனவே நீதிபதி போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு உத்தரவிட்டார். மேலும் கைதிகள் இருவரையும் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.