தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டாரம் செல்லப்பன் பேட்டை கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு மருத்துவ முகாமை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். அப்போது செல்லப்பேட்டையின் அரசு உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த பகுதிநேர ஆசிரியர்கள் கே.பிரபு, எஸ்.ராமமூர்த்தி, ஆர்.சங்கரலிங்கம்மாள் ஆகியோர் பணி நிரந்தரம் கேட்டு கோரிக்கை மனுவை அமைச்சரிடம் கொடுத்தனர். அந்த கோரிக்கை மனுவில் கடந்த 11 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாரம் காக்க தற்போது பணிபுரியும் 12 ஆயிரம் பேரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து மே மாதம் சம்பளம் ஒவ்வொரு வருடமும் கிடைக்கவில்லை.
அதுமட்டுமில்லாமல் பண்டிகை, முன்பணம் போனஸ், பணி மாறுதல், மகப்பேறு விடுப்பு, மருத்துவ விடுப்பு, குடும்ப பாதுகாப்பு, PF, ESI, இறந்தவர்களின் குடும்பத்திற்கு வேலை பணிப்பதிவேடு போன்ற சலுகைகளும் கிடைக்காமல் நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பும் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் கூறியது, சட்டமன்ற கூட்டத் தொடர் நடக்க உள்ளது. அதில் திமுக தேர்தல் வாக்குறுதி 181 ஐ நிறைவேற்றி பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். உங்கள் தொகுதி ஸ்டாலின் நிகழ்ச்சி நடந்த தர்மபுரி, கன்னியாகுமரி, மயிலாடுதுறையில் இன்றைய முதல்வர் தான் பகுதிநேர ஆசிரியர்களிடையே பணி நிரந்தரம் செய்வேன் என்றார். இதனை நினைவு படுத்திய நாங்கள் கல்வித் துறை அமைச்சர், முதல்வர் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்து வருகிறோம். எனவே முதல்வர் கையில்தான் முடிவு உள்ளது. அதனை இந்த சட்டசபை கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.