கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் தமிழக காவிரியின் உப நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு ஆகியவற்றில் கடந்த மூன்று தினங்களாக கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து கொண்டே வருகிறது. இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி தண்ணீர் தற்போது காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனை தனது முழு கொள்ளளவு எட்டியுள்ளதால் அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
அதனை தொடர்ந்து நீர்மின் நிலையங்கள் வழியாக 21,500 கன அடி தண்ணீர் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக 78,500 கன அடி தண்ணீரும் என மொத்தமாக ஒரு லட்சம் கன அடி தண்ணீர் மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் உயிர் மற்றும் உடைமைகளுக்கு பாதுகாப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.