எடப்பாடி பழனிசாமி தரப்பில் நேற்று பசும்பொன் சென்று நினைவிட பொறுப்பாளரிடம் ஆதரவு கேட்டு நிலையில் ஓபிஎஸ் அணி சார்பாக தர்மர் தலைமையில் மதுரை அண்ணாநகர் வங்கிக்கு சென்றுள்ளார்கள்.
அதிமுகவின் சார்பாக கடந்த 2014 ஆம் ஆண்டு 13 கிலோ தங்கத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு தங்க கவசம் வழங்கப்பட்டது. அப்போது அந்த தங்க கவசம் என்பது அதிமுகவில் யார் பொருளாளராக இருக்கிறார்களோ அவர்கள் மதுரை அண்ணா நகர் பகுதியில் இருக்கக்கூடிய வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்க்கும் அந்த தங்க கவசத்தை எடுத்து வழங்குவதாக முடிவு செய்யப்பட்டது. அந்த அடிப்படையில் தொடர்ந்து இந்த தங்க கவசம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30ஆம் தேதியை கணக்கிட்டு எடுத்துக் கொடுக்கப்படும்.
இந்தநிலையில், தற்போது அதிமுகவில் நிலவுகின்ற ஒற்றை தலைமை பிரச்சனையால் பிளவு காரணமாக ஓபிஎஸ்- ஈபிஎஸ் என இரண்டு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இதனால் இந்த ஆண்டு தங்க கவசத்தை யார் எடுத்துக் கொடுப்பது என்ற பிரச்சனை உருவெடுத்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஓபிஎஸ் அணி சார்பாக இந்த வங்கிக்கு நேரடியாக வந்து ஆதரவாளர்கள் தங்களுக்கு வழங்க வேண்டும் என்று மனு அளித்திருந்தார்கள். அதனை போன்று ஈபிஎஸ் சார்பாகவும் கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜு உள்ளிட்டோர் மதுரை அண்ணா நகர் கிளையில் இதே போன்று ஒரு மனுவை அளித்திருந்தார்கள்.
இந்த இரு மனுக்களை வங்கிகள் பரிசீலனை செய்து கொண்டிருக்கிற அதே வேளையில், நேற்று திடிரென்று எடப்பாடி அணியை சேர்ந்த திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் 7 முன்னாள் அமைச்சர்கள் நேரடியாக பசும்பொன் சென்று அங்கு இருக்கின்ற நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜனிடம் தங்களுக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் வழங்க வேண்டும் என்று கோரி ஆதரவு கேட்டு வந்திருந்தார்கள்.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பாக தற்போது ஓபிஎஸ் அணியின் சார்பாக மதுரை மாவட்ட ஓபிஎஸ் ஆதரவு செயலாளரும், முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன், எம்.பி தர்மர், மருது அழகுராஜ் மற்றும் வழக்கறிஞளுடன் வங்கிக்கு சென்று ஆதரவு கேட்டு பேசிவருகின்றனர்.. இந்த இரண்டு தரப்பிலும் தொடர்ந்து இதுபோன்று கோரிக்கையை முன்னிறுத்தி தொடர்ந்து கூறுகின்ற காரணத்தால் இந்த ஆண்டு தங்க கவசம் ஏற்கனவே இதற்கு முன்பு 2017 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது. அதே போன்ற முடிவை வங்கி எடுக்குமா? என்று தெரியவில்லை.. தொடர்ந்து இருதரப்பும் இது தொடர்பாக வலியுறுத்துவதால் வங்கி ஒரு குழப்ப நிலையில் தான் இருக்கிறது.