குடியிருப்பு பகுதிக்குள் கரடி உலா வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் இருக்கும் பெரியார் நகரில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளது. நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த கரடி அப்பகுதிக்குள் நுழைந்து வீட்டின் தடுப்பு சுவரை ஏறி உள்ளே குதித்து சென்றது. இதனை அடுத்து நாய் குரைக்கும் சத்தம் கேட்ட வீட்டின் உரிமையாளர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது வெளியே கரடி உலா வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும் அந்த வீட்டில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவிலும் கரடி உலா வரம் காட்சிகள் பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே கரடியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.