கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கதிரேப்பள்ளி கிராமத்தில் விவசாயியான வெங்கடேசப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேணுகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஜீவன்(13), பவன் குமார்(9) 11 மாத கைக்குழந்தையான சாய் தர்ஷன் ஆகிய 3 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் வெங்கடேசப்பா தனது மனைவி மற்றும் மகன்களுடன் முனியப்பன் கோவிலில் பொங்கல் வைத்து சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார்.
இதனை அடுத்து பொங்கல் வைத்தபோது திடீரென புகைமூட்டம் எழுந்ததால் அருகில் இருந்த மரத்திலிருந்து வந்த தேனீக்கள் வெங்கடேசப்பா உள்ளிட்ட அனைவரையும் கொட்டியது. இதனால் படுகாயமடைந்த வெங்கடேசப்பா, அவரது மனைவி, மகன்கள், தாய் ஆகிய 6 பேரும் படுகாயமடைந்தனர். இதனை பார்த்த பொதுமக்கள் 6 பேரையும் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.