சென்னையில் உள்ள ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் வரலட்சுமி என்பவர் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் மாணிக்கம். இந்த தம்பதிகளுக்கு சத்யா (20) என்ற மகள் இருந்துள்ளார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் பிகாம் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த மாணவியை ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் தயாளனின் மகன் சதீஷ் ஒரு தலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். அதோடு சத்யாவை தன்னை காதலிக்குமாறு கூறி சதீஷ் பலமுறை தொந்தரவு செய்துள்ளார். இதில் ஒரு நாள் மாணவியை சதீஷ் தாக்கியதாக கூறப்படும் நிலையில் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பிறகு இரு தரப்பினரையும் காவல்துறையினர் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் சத்யா கல்லூரிக்கு செல்வதற்காக பரங்கிமலை ரயில்வே நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சதீஷ் சத்யாவை வழிமறித்து தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் தகராறு முற்றவே ஆத்திரமடைந்த சதீஷ் சத்யாவை ஓடும் ரயில் முன்பு தள்ளிவிட்டார். இதில் மாணவி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சதீஷை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் சத்யாவின் தந்தை மகள் இறந்த துக்கத்தில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இசை அமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது தன்னுடைய twitter பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் சத்யாவை கொன்று அப்பாவின் தற்கொலைக்கு காரணமாக இருந்த சதீஷை பொறுமையாக விசாரித்து 10 வருஷத்துக்கு அப்புறம் தூக்குல போடாம தயவுசெய்து உடனே விசாரித்து ரயில்ல தள்ளிவிட்டு தண்டிக்கும்படி சத்யாவின் சார்பாக பொதுமக்களில் ஒருவனாக கணம் நீதிபதி அவர்களை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதிஷை, பொறுமையாக விசாரித்து 10 வருஷத்துக்கு அப்புறம் தூக்குல போடாமல், தயவு செய்து, உடனே விசாரித்து, ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும் படி, சத்யாவின் சார்பாக பொது மக்களில் ஒருவனாக, கனம் நீதிபதி அவர்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்🔴 pic.twitter.com/b8h5CPb4hg
— vijayantony (@vijayantony) October 14, 2022