எலான் மஸ்கிடம், அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக டுவிட்டர் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்கிடம், டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக டுவிட்டர் நிறுவனம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை முழுமையாக வாங்க கடந்த ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் பேசினார் எலான் மஸ்க். அந்நிறுவனத்துடன் நடத்திய ஒப்பந்தத்தில் அனைத்து பங்குகளையும் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்க எலான் மஸ்க் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இந்திய ரூபாயின் மதிப்பின் படி இந்த தொகை கிட்டத்தட்ட 3 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாயாகும். ஆனால் டுவிட்டரிலுள்ள போலி கணக்குகள் குறித்து உண்மையான தரவுகளை பொதுவெளியில் ஆதாரத்துடன் வழங்காத வரை அந்நிறுவனத்தின் ஒப்பந்தம் முன்னோக்கி நகராது என தெரிவித்த எலான் மஸ்க் ஜூலை மாதம் ஒப்பந்தத்திலிருந்து பின் வாங்கினார். இதனை அடுத்து டுவிட்டர் நிறுவனம் எலான் மஸ்க் மீது தொடர்ந்த வழக்கு கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. “டுவிட்டரின் போலி கணக்குகள் விவரம் வேண்டும்” என்ற பெயரில் பொய்யாக காரணம் காட்டி, இந்த ஒப்பந்தத்திலிருந்து அவர் விலக முயற்சிப்பதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் மிகப்பெரும் ஒப்பந்தம் தொடர்பாக, எலான் மஸ்கிடம், சட்ட அமலாக்க துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான விவரங்களை தருமாறு எலான் மஸ்க் தரப்பிடம் பலமுறை கேட்டும், இன்னும் வழங்கவில்லை எனவும் டுவிட்டர் நிர்வாகம் கூறியுள்ளது. இந்நிலையில், டுவிட்டரை 54.20 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்க கடந்த வாரம் எலான் மஸ்க் சம்மதம் தெரிவித்துள்ளார். இருப்பினும், கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுப்படி, வரும் 28 ஆம் தேதி வரை டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை மீண்டும் மேற்கொள்ள முடியாது.