இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடியுடன் இன்று டெல்லி இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்த இந்தியா-அமெரிக்கா இடையே 3 ஒப்பந்தங்கள் பிரதமர் மோடி – அதிபர் ட்ரம்ப் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறையில் ரூ.21 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அமெரிக்காவில் இருந்து எண்ணெய் ஏரிவாயு இறக்குமதி செய்ய ரூ.14,20,000 கோடிக்கு ஒப்பந்தமாகியுள்ளது. மேலும் அமெரிக்காவின் ராணுவ ஆயுதங்கள், அப்பாச்சி மற்றும் ரோமியோ ஹெலிகாப்டர்களை இந்தியாவிற்கு தர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிபர் டிரம்ப், இரு நாடுகள் இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணி தீவிரம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இந்தியர்கள் தொழில் தொடங்குவதற்கான நடைமுறையை எளிமையாக்கி காலத்தை குறைத்துள்ளேன் என்று கூறிய அவர், அமெரிக்காவில் முதலீடு செய்ய வருமாறு இந்திய தொழில்துறையினருக்கு அழைப்பு விடுத்துள்ளார். தொழில் முனைவோரும் வேலை வாய்ப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
உலகின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா விளங்குகிறது. உலகில் பல பகுதிகளில் அமைதியை நிலைநாட்டவே அமெரிக்கர்கள் பணிபுரிகின்றனர். தலிபான்களுடன் விரைவில் உடன்பாடு எட்டப்படும் என நம்புகிறேன். பயங்கரவாதத்தை ஒடுக்க மற்றவர்களைவிட அதிக அளவில் செயலாற்றி உள்ளேன். நான் மீண்டும் அமெரிக்க அதிபரனால் பங்குச்சந்தை வளர்ச்சி அடையும் என கூறினார்.