வயதான தம்பதி சப்- கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள சாத்தனத்தம் கிராமத்தில் கோவிந்தன்(75)- பூங்காவனம்(72) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கருப்பன்(50), பாலுசாமி(45) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். பாலுசாமி இறந்து விட்டதால் கருப்பன் தனது தாய் தந்தையை பராமரித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகனின் விருப்பப்படி அப்பகுதியில் இருந்த 3 சென்ட் நிலத்தை கருப்பன் தனது மகனின் பெயரில் எழுதிக் கொடுத்துள்ளார். அந்த இடத்தை கருப்பன் தனது மனைவி அல்லி பெயரில் மாற்றிக் கொண்டார். இந்நிலையில் கோவிந்தனையும் பூங்காவனத்தையும் அவர்களது மகனும், மருமகளும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறினர்.
இந்நிலையில் கருப்பன் தனது பெற்றோருக்கு சாப்பாடு கொடுக்காமல் கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வயதான தம்பதியினர் நேற்று முன்தினம் துணிமணிகள் பாத்திரம் உள்ளிட்டவற்றை சப்- கலெக்டர் அலுவலகத்திற்கு எடுத்து வந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்து சப்-கலெக்டர் பழனி நடத்திய விசாரணையில், எங்களது மகன் எங்களை வீட்டை விட்டு துரத்தி விட்டதாக இருவரும் தெரிவித்து மனு அளித்தனர். அதன் பெயரில் நடவடிக்கை எடுப்பதாக சப்-கலெக்டர் உறுதி அளித்த பிறகு வயதான தம்பதியினர் தர்ணாவை கைவிட்டு அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.