சிலைகடத்தல் தொடர்பான 41 வழக்குகளின் ஆவணங்கள் காணாமல் போனதாக வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் இருந்து சிலைகள் கடத்தப்பட்டது தொடர்பான 41 வழக்குகளின் ஆவணங்கள் காணாமல் போனதாக வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்திய நாராயணன், ஹேமலதா ஆகியோரின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆவணங்கள் மாயமானதா என்பது குறித்து உள்துறை செயலர், டிஜிபி விரிவான அறிக்கை தர உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
மேலும் ஆவணங்கள் மாயமானது குறித்து 2018ல் மனு தாரர் புகார் அளித்தது பற்றி தற்போது வரை பதிலளிக்காதது ஏன் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர், 2 ஆண்டுகளாக சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரி கட்டுப்பாட்டில் ஆவணங்கள் இருந்தன. உச்சநீதிமன்றம் உத்தரவு படி தற்போதுதான் வழக்கு ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
மேலும் ஆவணங்களை ஆய்வு செய்து பதிலளிக்க கால அவகாசம் வழங்கவேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அரசு தரப்பின் கோரிக்கையை ஏற்று, சிலைக்கடத்தல் வழக்கு ஆவணங்கள் மாயமானதா? என்பது பற்றி மார்ச் 31-க்குள் தமிழக அரசு உள்துறை செயலர் , டிஜிபி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.