அ.தி.மு.க சார்பாக அதிமுக-வின் பொன்விழா ஆண்டு மற்றும் 51ம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் ஒரிக்கை பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான வி.சோமசுந்தரம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்நிலையில் வி.சோமசுந்தரம் பேசியதாவது “தி.மு.க ஆட்சிக்கு வந்து 16 மாதங்கள் ஆன நிலையில், காஞ்சிபுரத்தில் எந்த ஒரு புது திட்டமும் கொண்டுவரவில்லை.
எந்த ஒரு புது திட்டத்தையும் செயல்படுத்த முடியாமல் பூஜ்ஜியமாக இந்த ஆட்சி இருந்து கொண்டிருக்கிறது. அ.தி.மு.க தொண்டர்களால்தான் தி.மு.க ஆட்சிக்கு சாவுமணி அடிக்க முடியும். அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய கூட்டம் மிக விரைவில் நடைபெற இருக்கிறது.
அக்கூட்டம் நடந்தால் தமிழகத்தினுடைய தலையெழுத்து மாற்றி எழுதப்படும். இனி தி.மு.க எந்தஒரு தேர்தலிலும் வெற்றிபெற முடியாத ஓர் சூழலுக்கு தள்ளப்படும். அ.தி.மு.க மட்டும்தான் மக்களுக்காக இயங்ககூடிய ஒரு மாபெரும் இயக்கம் என்று கூறக்கூடிய இயக்கமாக இருக்கு” என்று அவர் பேசினார்.