டி20 உலக கோப்பை தொடரில் இருந்து தீபக் சாஹர் விலகி இருப்பதால், அவருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா உட்பட 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். இந்த சுற்றில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தான் அணியை 23ஆம் தேதி எதிர்கொள்கிறது. இதற்கிடையே இந்திய அணி வீரர்கள் மும்பையில் இருந்து கிளம்பி ஆஸ்திரேலியாவில் பெர்த் நகருக்கு சென்று அங்குள்ள மைதானத்தில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே உலக கோப்பை தொடரிலிருந்து காயம் காரணமாக ஜஸ்பிரிட் பும்ரா, ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக விலகி உள்ளனர். இந்நிலையில் டி20 உலக கோப்பை இந்திய அணியில் ரிசர்வ் வீரராக இடம் பிடித்திருந்த தீபக் சாஹரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகி இருக்கிறார். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பயிற்சி செய்யும் போது ஏற்பட்ட காயம் காரணமாக தீபக் சாஹர் அந்த தொடரில் இருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து தற்போது டி20 உலக கோப்பை தொடரில் இருந்தும் தீபக் சாஹர் விலகி இருக்கிறார். இதனால் இவருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் நாளை ஆஸ்திரேலியாவுக்குச் செல்லவுள்ளனர், அவர்களில் ஒருவர் ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பதிலாக தேர்வு செய்யப்படுவார். மேலும் அவர்களுடன் ஸ்ரேயாஸ் & பிஷ்னோய் ஆகிய இருவரும் செல்கின்றனர்.. முகமது ஷமியே தேர்வு செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பிசிசிஐ விரைவில் பும்ராவுக்கு பதிலாக மூவரில் ஒரு வீரரை தேர்வு செய்து அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி:
ரோகித் சர்மா (கே), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ஆர் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.
காத்திருப்பு வீரர்கள்: முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், ஷர்துல் தாக்கூர்.