தொழிலாளி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யங்கோட்டை பகுதியில் கூலி தொழிலாளியான ரத்தினகுமார்(29) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 8- ஆம் தேதி நண்பர்களுடன் ரத்தினகுமார் வெளியே செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். அதன் பிறகு அவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் ரத்தினகுமாரின் அண்ணன் ராஜ்குமார் பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ரத்தனகுமாரின் நண்பர்கன விக்னேஷ், அபிகுமார், மைதிலிநாதன் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரிடம் கஞ்சா வாங்கி தருவதாக கூறி விக்னேஷ் பணம் வாங்கியுள்ளார். கூறியபடி அவருக்கு கஞ்சா வாங்கி கொடுக்கவில்லை. இதனால் அந்த நபர் விக்னேஷ் குறித்து ரத்தினகுமாரிடம் விசாரித்துள்ளார்.
அப்போது விக்னேஷ் கஞ்சா வாங்கி கொடுக்க மாட்டார் எனவும், அவரை பற்றி அவதூறாகவும் ரத்தினகுமார் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த விக்னேஷ் உள்ளிட்ட நண்பர்கள் சேர்ந்து ரத்தினகுமாரை மோட்டார் சைக்கிளில் புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு அழைத்துச் சென்று அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளனர். இதனை அடுத்து நீர்வீழ்ச்சியில் ரத்தினகுமாரின் உடலை வீசி விட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் 2 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு பள்ளத்தில் கிடந்த ரத்தினகுமாரின் உடலை மீட்டனர். பின்னர் தொழிலாளியின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதனை அடுத்து விக்னேஷ், மைதிலிநாதன், அபிக்குமார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.