தமிழகம் முழுதும் நேற்று மாலை நடந்த சமூக நல்லிணக்க மனிதசங்கிலி அறப்போரில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அப்போது மதத்தின் அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி அமைதியை சீர்குலைக்க முயற்சி செய்யும் பிரிவினைவாதிகளை இங்கு ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம் என மக்களிடையே தொடர்ந்து பரப்புரை மேற்கொள்ளும் வகையிலும், சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னெடுப்பால் தமிழகம் முழுதும் நேற்று இந்த பேரணி நடந்தது. இவற்றில் காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட 26 கட்சிகள் மற்றும் 44 அமைப்புகள் சார்பாக சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போராட்டம் நடந்தது.
சென்னை அண்ணா சாலையில் நடந்த மனித சங்கிலி அறப்போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன், திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்று சனாதன கும்பலுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இந்நிலையில் திருமாவளவன் பேசியதாவது “சனாதன சக்திகளுக்கு எதிராக தமிழக வரலாற்றில் இதுவரையிலும் இல்லாத அளவுக்கு எதிர்ப்பினை பதிவுசெய்து உள்ளோம். தமிழகம் அவர்கள் நினைப்பதைப் போன்று ஏமாளிகள் இருக்கும் மாநிலமல்ல. சாதி மற்றும் மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்துகிற சங்பரிவார் கும்பலின் சதிவலைகளை முறியடிப்போம். இதற்கிடையில் சனாதன சக்திகள் இங்கே வாலாட்டலாம், காலூன்றலாம், வேரூன்றலாம் என நினைக்கக்கூடாது. ஆகவே வந்த வழியே திரும்பி செல்லுங்கள் என எச்சரிக்கை விடுக்கின்றோம். ஆர்.எஸ்.எஸ் என்பது ஒருசராசரி ஜனநாயக இயக்கமல்ல. அந்த இயக்கத்தின் அணி வகுப்புக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கக்கூடாது. ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்கினால் அதை சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்வோம்” என்று அவர் முழக்கமிட்டார்.