தனது சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீடு வழங்க தனியார் வங்கிக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை குரோம்பேட்டை பகுதியில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சரக்குகளை கையாளும் போக்குவரத்து நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்கு கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் வங்கியில் கணக்கு உள்ளது. இந்நிலையில் அசோக்குமார் அந்த வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வந்துள்ளார். கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு கிரெடிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்கியதற்கு செலுத்த வேண்டிய பணத்தை குறிப்பிட்ட நாளுக்குள் செலுத்துவதற்காக காசோலை கொடுத்துள்ளார். ஆனால் அவரது வங்கி கணக்கில் பணம் இருந்த போதும் போதிய தொகை இல்லை என கூறி காசோலை திருப்பி அனுப்பப்பட்டு விட்டதாக வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் காலதாமத கட்டணமாக 300 ரூபாயும் அவரிடமிருந்து வசூலித்துள்ளனர்.
இதுகுறித்து அசோக்குமார் முறையான ஆவணங்களுடன் வங்கி நிர்வாகத்திடம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவர்கள் சரியாக பதில் அளிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அசோக்குமார் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று ஆணைய தலைவர் ஜிஜா, உறுப்பினர் சிவகுமார், நந்தகோபாலன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் மனுதாரரின் வங்கி கணக்கில் போதிய பணம் இருந்தும் வங்கி ஊழியர்கள் காசோலையை திருப்பி அனுப்பி காலதாமத கட்டணத்தை வசூலித்திருப்பது மிகவும் தவறானது மற்றும் சேவை குறைபாடு. எனவே சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம் பாதிக்கப்பட்ட அசோக்குமாருக்கு இழப்பீடாக 50 ஆயிரம் மற்றும் வழக்கு செலவுக்காக 3 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும் பெற்ற காலதாமதக் கட்டணத்தை திருப்பி வழங்க வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.