தண்ணீரில் மூழ்கி மூன்று சிறுவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள தவிட்டுப்பாளையம் பழனியப்பா வீதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 8 வயதுடைய நந்த கிஷோர் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நந்த கிஷோரும் அதே பகுதியில் வசிக்கும் சிபினேஷ்(10), ராகவன்(10) ஆகிய சிறுவர்களுடன் தாமரை குட்டை என்ற இடத்திற்கு சைக்கிளில் சென்று கல்குவாரி குட்டையில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் மூன்று சிறுவர்களும் தண்ணீரில் மூழ்கினர்.
இந்நிலையில் வெளியே சென்ற சிறுவர்கள் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் தேடி பார்த்த போது தாமரைக்குட்டை பகுதியில் சிறுவர்களின் சைக்கிள் நின்றது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சிறுவர்களின் உடலை மீட்டனர். பின்னர் சிறுவர்களின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.