மேற்குவங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் வணிகம் மற்றும் தொழில்துறை மந்திரி ஆக பார்த்தா சட்டர்ஜி (69) என்பவர் இருக்கிறார். இவர் மாநில கல்வித்துறையின் மந்திரியாகவும் செயல்பட்டுள்ளார். முந்தைய காலத்தில் ஆசிரியர்கள் பணி நியமனத்தில் ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என கொல்கத்தா ஹைகோர்ட் உத்தரவிட்டது.
சிபிஐ விசாரணையின் போது சட்டவிரோதமாக பண பரிமாற்றம் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்ததால், அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. கடந்த ஜூலை மாதம் மந்திரி பார்த்தா மற்றும் அவரின் உதவியாளரான நடிகை அர்பிதா முகர்ஜி ஆகியோரது வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது அர்பிதா வீட்டில் 49.80 கோடி பணம் மற்றும் 5.20 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகள், நகைகள் போன்றவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அர்பிதா மற்றும் பார்த்தா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தொடர்ந்து அமலாக்க துறையினர் நடத்தி வரும் விசாரணையில், பணப் பறிமுதல் மற்றும் ஆசிரியர்கள் பணி நியமன ஊழல் போன்ற விவகாரங்களில் எம்எல்ஏ மாணிக் பாட்டாச்சாரியா என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக தற்போது புகார் எழுந்ததால் இன்று அவரை கைது செய்ய முடிவு செய்துள்ளனர். மேலும் எம்எல்ஏவின் கைது மம்தா பானர்ஜிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.