நாடு முழுதும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள், இனிப்பு வகைகள் மற்றும் பட்டாசு விற்பனையானது களைகட்ட தொடங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் பாதுகாப்பான இனிப்பு மற்றும் காரம் தயாரிக்கப்படுவதை உறுதிசெய்யும் அடிப்படையில் உணவு பாதுகாப்புத்துறை சார்பாக அதன் விற்பனையாளர்களுக்குரிய விழிப்புணர்வு கூட்டம் சேலம் 3 ரோடு பகுதியிலுள்ள தனியார் கூட்டரங்கில் நேற்று நடந்தது. சேலம் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் கதிரவன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் 100க்கும் அதிகமான தயாரிப்பு மற்றும் விற்பனையாளர்கள் பங்கேற்றனர். இதையடுத்து சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கதிரவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை சார்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அதிலும் குறிப்பாக கிப்ட் பாக்ஸ்களில் தயாரிப்பு தேதி உள்ளிட்டவைகள் அவசியம் இருக்க வேண்டும். அதன்பின் திருமண மண்டபம் மற்றும் பெரிய இடங்களில் இனிப்பு பலகாரங்கள் செய்யும் போது அவை தரமானதாக தயாரிக்கப்பட வேண்டும். அத்துடன் லேபிள் ஒட்டி விற்கவேண்டும். லைசன்ஸ் இன்றி பொருட்களை தயாரிக்ககூடாது. இதை மீறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதுமட்டுமின்றி சுமார் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
இனிப்பு மற்றும் காரவகைகளில் வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக அனுமதிக்கப்பட்ட அளவைவிட செயற்கை நிறமிகளை சரியான அளவு சேர்க்க வேண்டும். அதிகம் பயன்படுத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகளின் உணவு தரத்தை கண்காணிக்க 10 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும், உணவு பாதுகாப்பு விதிமுறைகளை மீறி தரமற்ற இனிப்பு வகைகளை தயாரிப்போர் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.