டெல்லி போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் தலைமைக் காவலர் உயிரிழந்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. டெல்லியில் யமுனா விஹார் என்ற பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடுபவர்களுக்கும் , குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக இருப்பவர்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலில் இந்த வன்முறை நிகழ்ந்துள்ளது.
இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் டெல்லி வர உள்ளதால் நிலைமையை கட்டுப்படுத்த டெல்லி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது. போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் கற்களை எடுத்து வீசியதில் தலைமைக் காவலர் ரத்தன்லால் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோலாக்பூர் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்த ரத்தன்லால் மரணம் அடைந்ததை அடுத்து, டெல்லியின் 10 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு டிஜிபி காயமடைந்துள்ளார். முன்னதாக சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி மீண்டும் அமைதியைக் கொண்டு வருமாறு டெல்லி ஆளுநர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோரை நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்றும் முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.