ராஜஸ்தான் அஜ்மீர் மாவட்டத்தில் சஞ்சய் சர்மா என்பவர் வசித்து வருகிறார். சாமியாராக வலம் வரக்கூடிய இவர், 25 வயது இளம்பெண் ஒருவரது குடும்ப சாமியாராகவும் ஆகியுள்ளார். இதை பயன்படுத்திக்கொண்டு அப்பெண் வசித்த வீட்டுக்கு அடிக்கடி சென்று, பூஜை, சடங்குகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் யாருமில்லாத தருணத்தில் இளம் பெண்ணின் வீட்டுக்கு சென்ற சாமியார், அவரை பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து அதனை வீடியோவாக பதிவு செய்துகொண்டார். அதன்பின் இதை வைத்து பணம் கேட்டு மிரட்டி இருக்கிறார். அந்த இளம் பெண்ணை பல நாட்களாக சிறைபிடித்து வைத்து கொண்டு, சாமியார் மீண்டும் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். இம்முறை அவருடன் வேறு சில நபர்களும் சேர்ந்துகொண்டனர்.
பின் இளம்பெண்ணை மயக்கமடைய செய்து பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. இதன் காரணமாக இச்செயலில் ஈடுபட்டவர்கள் எத்தனை பேர் என்ற விபரங்களை அந்த இளம்பெண்ணால் சரியாக கூறமுடியவில்லை என வழக்கை விசாரித்து வரும் காவல்துறையினர் கூறியுள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினரிடம் கூறினால், அப்பெண்ணின் கணவர் மற்றும் குழந்தைகளை கொலை செய்து விடுவேன் எனவும் சாமியார் மிரட்டல் விடுத்துள்ளார். இத்தகவல் அறிந்து அவரது கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்படி தப்பியோடிய சாமியாரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அத்துடன் அப்பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு, அவரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. மேலும் போலீசாரின் விசாரணை நடைபெற்று வருகிறது.