தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழையும், 22 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 22 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அதன்படி தமிழகத்தில் இன்று ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, அரியலூர், கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, மதுரை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, தஞ்சை, திருவாரூர்,
கரூர், நாகை, மயிலாடுதுறை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் உட்பட 22 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல புதுச்சேரி, காரைக்காலிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் சென்னை மற்றும் புறநகரில் ஒரு சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 14ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.