கல்கி எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் முதல் பாகம் தமிழ், ஹிந்தி உட்பட 5 மொழிகளில் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியாகியது. இவற்றில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடித்திருக்கின்றனர். ஏஆர். ரஹ்மான் இசையில் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், சுபாஷ்கரனின் லைகா புரோடக் ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. பான் இந்தியா முறையில் உருவாகிய இந்த படத்தின் 2 பாகங்களின் பட்ஜெட் ரூபாய்.500 கோடி என்று கூறப்படுகிறது. இப்போது இத்திரைப்படம் வசூலை அள்ளி குவித்து வருகிறது.
முதல் வாரத்தில் மட்டும் உலகம் முழுதும் ரூபாய்.325 கோடியை வசூலித்து இருக்கிறது. தமிழகத்தில் ரூபாய்.130 கோடியை வசூலித்திருக்கிறது. இதன் காரணமாக இதன் அடுத்த பாகத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த படம் அமெரிக்காவில் மட்டும் சுமார் 55 லட்சம் அமெரிக்க டாலர்களை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. அதன்படி இந்திய ரூபாய் மதிப்பில் இப்படம் ரூ.46 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதுவரை வெளியான தமிழ் திரைப்படங்களில் அதிக வசூல் செய்த படமாக பொன்னியின் செல்வன் படம் அமெரிக்காவில் அமைந்திருக்கிறது. இந்த திரைப்படம் ரஜினிகாந்தின் 2.0 படத்தின் வசூலை முறியடித்து, முதலிடம் பிடித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.