பொன்னியின் செல்வன் படத்தில் தன் கனவு பாத்திரமான பெரிய பழுவேட்டரையராக நடித்த சரத்குமாரை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டினார்.
தமிழ் திரையுலகில் பல காலமாக திரைப்படமாக்க வேண்டும் என பெரும் ஆவலுக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் படம் கடந்த 30ம் தேதி வெளியாகியது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது, நடிகர் ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் நாவலுடன் தனக்கு ஏற்பட்ட தாக்கங்கள் பற்றி பல்வேறு சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். மேலும் பெரிய பழுவேட்டரையர் தன் கனவு கதாபாத்திரம் என்று ரஜினி கூறினார்.
அதுமட்டுமின்றி பொன்னியில் செல்வனில் பெரிய பழுவேட்டரையராக தான் நடிக்க வேண்டும் என இயக்குநர் மணிரத்னத்திடம் கேட்டதாகவும், ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் ரஜினி மேடையில் குறிப்பிட்டார். இத்திரைப்படத்தின் பெரிய பழுவேட்டரையராக சரத்குமார் நடித்து உள்ளார். இந்த நிலையில் அப்பாத்திரத்தில் நடித்த சரத்குமாரை நடிகர் ரஜினி நேரில் அழைத்து பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவருடன் வரலட்சுமி சரத்குமாரும் சென்று இருக்கிறார். இதுகுறித்த புகைப் படங்களை வரலட்சுமி சரத்குமார் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.