2ஆவது ஒருநாள் போட்டியில் நடுவர் ஷிகர் தவானிடம் டாஸ் போட நாணயத்தை கொடுக்காமல் மறந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி முதலில் நடைபெற்ற டி20 தொடரை 1: 2 என்ற கணக்கில் இந்திய அணியிடம் இழந்தது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.
இந்நிலையில் நேற்று இரண்டாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 1:30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் இரு அணிகளிலுமே மாற்றங்கள் செய்யப்பட்டது. அதன்படி இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், ரவி பிஷ்னாய் ஆகியோர் நீக்கம் செய்யப்பட்டு, அவர்களுக்கு பதிலாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷபாஸ் அகமது ஆகியோர் களமிறக்கப்பட்டனர்.
அதேபோல தென்னாப்பிரிக்க அணியில் கேப்டன் டெம்பா பவுமா மற்றும் தப்ராஸ் ஷம்ஸி ஆகிய இருவருக்கு பதிலாக ரீசா ஹென்றிக்ஸ் மற்றும் பார்ச்சூன் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டனர். எனவே கேசவ் மஹாராஜ் தலைமையில் தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 278 ரன்கள் சேர்த்தது. தென்னாப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக ஹென்றிக்ஸ் 76 பந்துகளில் 74 ரன்களும், மார்க்ரம் 89 பந்துகளில் 79 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய இந்திய அணி ஷ்ரேயஸ் ஐயர் அதிரடி சதத்தால் 45.5 ஓவரில் 3 விக்கெட் இழந்து 282 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷ்ரேயஸ் ஐயர் 111 பந்துகளில் (15 பவுண்டரி) 113* ரன்களும், இஷான் கிஷன் 84 பந்துகளில் (7 பவுண்டரி, 4 சிக்சர்) 93 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர்.
இப்போட்டியில் தொடக்கத்தில் டாஸ் போடும்போது இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான், தென்னாப்பிரிக்க அணி கேப்டன் கேசவ் மஹாராஜ், போட்டி அம்பயர் மற்றும் வர்ணனையாளர் ஆகியோர் இருந்தனர். அப்போது அங்கிருந்த வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சரேக்கர் தவானிடம் டாஸ் போடச் சொன்னார். ஆனால் அதற்கு தவான் என்னிடம் நாணயம் இல்லை என்று சிரித்தபடி, வெறும் கையால் டாஸ் போடுவதுபோல செய்துவிட்டு, அது போட்டி நடுவர் ஜவகல் ஸ்ரீநாத் இடம் இருக்கிறது என்று தெரிவித்தார். அதேபோல கேசவ் மஹாராஜும் சிரித்தார்.
அதாவது, அம்பயர் ஜவஹல் ஸ்ரீநாத் தவானிடம் நாணயத்தை கொடுக்காமல் மறந்து தனது பைக்குள் வைத்துவிட்டார். இதனை தவான் நினைவு படுத்திய பிறகு தான் அதனை எடுத்து தவனிடம் கொடுத்தார். அதன் பின் தவான் டாசை சுண்டி விட்டார். டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் கேசவ் மஹாராஜ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த வீடியோவை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
🚨 Toss Update from Ranchi 🚨
South Africa have elected to bat against #TeamIndia in the second #INDvSA ODI.
Follow the match ▶️ https://t.co/6pFItKiAHZ @mastercardindia pic.twitter.com/NKjxZRPH4e
— BCCI (@BCCI) October 9, 2022