கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சூளகிரி ஊராட்சியில் அளேசீபம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் ஓசூர்-தர்மபுரி மாநில நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சாலை ஓரமாக இருக்கும் வீடுகளில் கழிவு நீர் செல்வதற்கு வழி இல்லாததால் சாலையில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் சாலையோரமாக புதிதாக கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டதாக கூறி ஒரு வீட்டின் சுவற்றில் எழுதப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 4,79,999 நிதி ஒதுக்கப்பட்டுள்ள தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைப் பார்த்த கிராம மக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது கழிவு நீர் கால்வாய் கட்டாமலேயே கழிவு நீர் கால்வாய் கட்டப்பட்டதாக கூறி சுவற்றில் எழுதியுள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது உடனடியாக ஊராட்சியில் இருந்து வந்து எழுதப்பட்டதை பெயிண்ட் அடித்து அழித்துள்ளனர். கழிவுநீர் கால்வாயே கட்டப்படாத போது கழிவு நீர் கால்வாய் கட்டப்பட்டதாக கூறி ரசீது எழுதப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி நாக சங்கரிடம் கேட்டபோது வேறு ஒரு இடத்தில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய்க்கு மாற்றி இந்த பகுதியில் வந்து திட்ட மதிப்பீடு எழுதி விட்டதாக மழுப்பலான பதிலை கூறியுள்ளார். மேலும் கழிவு நீர் கால்வாயே கட்டப்படாத போது கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்ட இடம் ஒப்பந்ததாரருக்கு மறந்து விட்டதா என கிராம மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஊராட்சி மன்றத்தின் ஊழல்களை தடுப்பதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.