இத்தாலி நாட்டில் இருந்து ஆஸ்திரியா செல்வதாக இருந்த இரயில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இரு நாட்டு எல்லையில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது .
கொரோனா வைரஸ் சீனாவில் மட்டுமில்லாமல் மற்ற பிற நாடுகளுக்கும் பரவி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதாவது, ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர், ஈரான், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு பலர் உயிருக்கு போராடி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் ஐரோப்பிய நாடான இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரையில் 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 152 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.
இந்நிலையில், இத்தாலியின் வெனிஸ் நகரில் இருந்து இரயில் ஒன்று அண்டை நாடான ஆஸ்திரியா நாட்டின் முனிச் நகருக்கு சென்றுகொண்டிருந்தது. அப்போது அதில் 2 பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து, ஆஸ்திரிய அதிகாரிகள் தங்கள் நாட்டு எல்லைக்குள் இரயிலை அனுமதிக்க மறுப்பு தெரிவித்து விட்டனர்.
இதனால் ஆஸ்திரியாவின் எல்லையில் இருக்கும் இத்தாலியின் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் பிரின்னீர் பாஸ் (Brenner Pass) நிலையத்திலேயே ரயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.