Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் இயல்பு நிலைக்கு திரும்பியது : 7 மாதங்களுக்கு பிறகு இன்று பள்ளிகள் திறப்பு!

காஷ்மீரில் 7 மாதங்களுக்கு பின்னர் இன்று முதல் பள்ளிகளை திறக்க மாநில கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசியலமைப்பு சட்டத்தின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதுடன் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு மக்களுக்கு கடும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன.

பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் பதற்றமான நிலை காணப்பட்டதால் மாநிலம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. காஷ்மீரில் 810 நடுநிலை பள்ளிகள், 247 உயர்நிலைப்பள்ளிகள், 37 மேல்நிலைப்பள்ளிகள் உட்பட மொத்தம் 11,633 கல்வி நிலையங்கள் உள்ளன. இவற்றில் 5.29 லட்சம் மாணவர்களும், 4.74 லட்சம் மாணவிகள் என 10.03 லட்சம் மாணவர்கள் பயின்று வந்தனர்.

பள்ளிகளை திறக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், பாதுகாப்பு காரணங்களுக்காக குழந்தைகளை அனுப்ப பெற்றோர் முன்வரவில்லை. இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டது. தற்போது நிலைமை சீராகி வருவதால் கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் மாநில கல்வித்துறை இயக்குனர் கோரிக்கைக்கு இணங்க இன்று முதல் ஸ்ரீநகரில் பள்ளிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாநில கல்வித்துறை இயக்குனர் முகம்மது யானூஸ் மாலிக் கேட்டுக் கொண்டுள்ளார். பள்ளி திறப்பற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி ஸ்ரீநகரில் பள்ளிகள் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரையும், காஷ்மீரில் காலை 10.30 மணி முதல் மாலை 3.30 மணி வரையும் பள்ளிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |