சென்னையை சேர்ந்த வயதான ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ஒருவர் தன்னையும் தன்னுடைய மனைவியையும் மூத்த மகன் கவனிக்கவில்லை என்பதனால் அவருக்கு எழுதி வைத்த சொத்து பத்திரத்தை ரத்து செய்ய கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் அவர் தாக்கல் செய்த மனுவில் தனக்கு இடுப்பில் நான்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. தன்னுடைய மனைவிக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உதவிக்குரிய போது ஆஸ்திரேலியாவில் உள்ள மூத்த மகன் பதிலளிக்கவில்லை. தங்களை கடைசி காலத்தில் அவர் பார்த்துக் கொள்வதாக உறுதி அளித்ததால் தங்களுடைய சொத்து பத்திரங்களை எல்லாம் மூத்த மகனின் பெயருக்கு எழுதி வைத்தோம்.
ஆனால் உறுதி அளித்தபடி அவர் நடக்காததால் சொத்து பத்திரங்களை ரத்து செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, பெற்றோர் மற்றும் மூத்தோர் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் 2007 ன் படி மூத்த மகன் பெயரில் உள்ள சொத்து ஆவணங்கள் ரத்து செய்ய வழக்கு தொடர அனுமதி அளித்துள்ளார். தந்தைக்கு மகனாற்றும் உதவி என்கிற திருக்குறளில் இவனை மகனாக பெற தந்தையே பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்று பலரும் பாராட்டும் படி மகன் நடந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, நம்முடைய சமூகத்தின் அடிப்படை பண்புகளை உணர்த்துவதாக கூறியுள்ளார். ஆனால் சமூகத்தின் இந்த பண்பானது தற்போது வேகமாக அழிந்து வருவதற்கு இந்த வழக்கு சான்றாக இருப்பதாகவும் நீதிபதி தன்னுடைய தரப்பில் தெரிவித்துள்ளார்.