கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள எஸ்எம்எஸ் கலை அறிவியல் கல்லூரியின் இசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கலந்து கொண்டார். இதை பார்க்க வருபவர்களுக்கு இலவச அனுமதி என்றவுடன் சுமார் 15,000 பேர் அங்கு கூடி உள்ளனர். எதிர்பாராத அளவிற்கு கூட்டம் குவிந்ததால் அனைவரையும் உள்ளே அனுமதிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் நிகழ்ச்சியை பார்க்க வந்தவர்கள் கல்லூரியின் மதில் சுவரில் ஏறி ரசித்துள்ளனர். சுற்றுச்சுவர் மீது அதிகம் பேர் ஏறியதால் சுவர் இடிந்து விழுந்துள்ளது.
இதில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் உதவி ஆய்வாளர் பிலோமினா உள்ளிட்ட காவலர்கள் மற்றும் இளைஞர்கள் காயம் அடைந்தனர். சுவர் இடிந்ததையும் கவனிக்காமல் பலர் விழுந்தவர்கள் மீது ஏறி சென்றதால் மேலும் சிலர் காயம் அடைந்துள்ளனர். போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.