ரஷ்ய நாட்டுடன் கிரீமிய தீபகற்பத்தை சேர்க்கும் முக்கியமான பாலம் குண்டு வெடித்ததில் கடும் சேதமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரீமிய தீபகற்ப பகுதியானது, ரஷ்ய நாட்டுடன் சேர்க்கப்பட்ட பிறகு அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின், கடந்த 2018 ஆம் வருடத்தில் ஒரு புதிய பாலத்தை அமைத்தார். இந்தப் பாலம், கெர்ச் ஜனசந்தியின் இடையில் சுமார் 19 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டிருக்கிறது. ரஷ்ய நாட்டின் முக்கியமான நிலப்பரப்போடு கிரீமிய தீபகற்பத்தை ஒன்று சேர்க்கிறது.
ரயில்களும், மற்ற வாகனங்களும் செல்லும் வகையில் இரண்டு பிரிவுகளாக வழிகளும் அமைக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2020 ஆம் வருடத்திலிருந்து இந்த பாலம் முழுமையான பயன்பாட்டிற்கு வந்தது. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் மீதான போரில் ரஷ்ய படையினர் கெர்சன், லுகான்ஸ்க், டோனெட்ஸ்க் போன்ற பகுதிகளை தங்களுடன் இணைத்ததாக சமீபத்தில் அறிவித்தார்கள்.
இதனால் ஆத்திரமடைந்த உக்ரைன், ரஷ்ய நாட்டின் தளவாட பகுதிகளை குறி வைத்து தாக்குதல் மேற்கொண்டது. அந்த வகையில், இந்த பாலத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் வாகனங்கள் செல்லக்கூடிய சாலை கடும் சேதமடைந்தது. மேலும் ரயில் தண்டவாளத்தில் சென்ற சரக்கு ரயிலின் மீதும் தீப்பொறி பட்டு அனைத்து பெட்டிகளிலும் தீ பரவியது. எனவே, தற்போது இந்த பாலத்தில் தற்காலிகமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டிருக்கிறது.