தமிழகத்தில் சட்டமன்ற கூட்டத்தொடர் வருகிற 17-ஆம் தேதி நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தின் போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கை, ஸ்மார்ட் சிட்டி முறைகேடுகள் தொடர்பான அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அறிக்கை போன்றவைகள் ஆளும் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு தற்போது தமிழகத்தில் நடக்கும் போதைப்பொருள் விற்பனை மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை போன்றவைகள் குறித்து எதிர்க்கட்சியினர் சட்டசபையில் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சட்டமன்ற கூட்டத்தொடர் அனல் பறக்கும் என்று கூறப்படும் நிலையில், தற்போது புதிதாக ஒரு கேள்வி எழுந்துள்ளது.
அதாவது தற்போது அதிமுக கட்சியில் உட்க்கட்சி பூசல் ஏற்பட்டு கட்சி பிளவு பட்டு இருப்பதால் சட்டசபையில் ஓபிஎஸ் மற்றும் இபிஸுக்கு எப்படி இடம் ஒதுக்கீடு செய்யப்படும் என்பதுதான் தற்போது பலரது கேள்வியாகவும் இருக்கிறது. இதற்கு முன்பாக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் இபிஎஸ்ஸும், துணை எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் ஓபிஎஸ்-ம் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருப்பார்கள். ஆனால் தற்போது இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் எதிரெதிர் துருவங்களாக மாறி ஒருவரை ஒருவர் கட்சியிலிருந்து நீக்குவதாக கூறி சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர்.
அதோடு இபிஎஸ் ஆர்பி உதயகுமாரை எதிர்க்கட்சி துணை தலைவராக அறிவித்துள்ளதால் ஓபிஎஸ் அமர வேண்டிய இருக்கையில் ஆர்பி உதயகுமார் அமர்வார் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அதிமுக கட்சியின் முன்னாள் எம்எல்ஏக்களுடன் சேர்ந்து ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை உட்காருவதற்கு அனுமதிக்க கூடாது எனவும் இபிஎஸ் தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் எது எப்படி இருந்தாலும் சரி சட்டமன்ற கூட்டத்தொடர் நடக்கும்போது தான் யாருக்கு எந்த இடத்தில் இடம் ஒதுக்கீடு செய்யப்படும் என சபாநாயகர் கூறுவார் என்பதால், சட்டமன்ற கூட்டத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே பிரச்சனை நடந்து விடுமோ என அதிமுக தொண்டர்கள் அச்சப்படுகின்றனர்.