பி.டெக் பட்டதாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நேதாஜி நகரில் ராம் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹயக்கிரிவ ராம்(22) என்ற மகன் இருந்துள்ளார். சமீபத்தில் பெங்களூரில் இருக்கும் சாப்ட்வேர் நிறுவனத்தில் ராமிற்கு வேலை கிடைத்தது. நேற்று முன்தினம் தலை வலிப்பதாக பெற்றோரிடம் கூறிவிட்டு அறைக்கு தூக்க சென்ற ஹயக்கிரிவ ராம் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. அவர் கதவையும் திறக்காததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது முகத்தை பிளாஸ்டிக் கவரால் மூடி கழுத்தை சுற்றி கயிறு கட்டியபடி வாலிபர் இறந்து கிடப்பதை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கூறியதாவது, ஹயக்கிரிவ ராம் மூளையில் கட்டி இருந்ததால் அவர் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். அடிக்கடி தலைவலி வந்ததால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர். இதற்கிடையில் அவருக்கு வேலை கிடைத்த நிறுவனத்தில் இருந்து வேலையில் சேர்வதற்கான உத்தரவு வந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.