ஆப்கான் நாட்டின் தலைநகரான காபூலின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள தஷ்ட்-இ-பார்ச்சி நகரில் தனியாருக்கு சொந்தமான உயர் கல்வி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்த கல்வி மையத்தில் நேற்று ஏராளமான மாணவ-மாணவிகள் வந்து மாதிரி தேர்வை எழுதி கொண்டிருந்தனர். அப்பொழுது கல்வி மையத்துக்குள் நுழைந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டிக் கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்துள்ளார்.
இந்த பயங்கர குண்டு வெடிப்பில் சிக்கி 35 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். மேலும் 80-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானிலுள்ள ஐக்கிய நாடுகளின் உதவிப் பணி அமைப்பு(யு என் ஏ எம் ஏ), காபூலிலுள்ள அதன் மனித உரிமைக் குழுக்கள் மூலம் உதவுவதாக தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து பலியானவர்களில் பெரும்பாலோர் சிறுமிகள் மற்றும் இளம் பெண்கள். மேலும் சரியான பலி எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்து வருவதாக கூறி இருந்தது.
இந்நிலையில் தற்கொலைப் படைத் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது அதிகரித்துள்ளது. இதன்படி 46 பெண் குழந்தைகள் உள்பட 53 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், பெண்கள் உள்பட 110 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணையம் இந்த குற்றச்செயல்களை ஆவணப்படுத்தி வருகின்றது. உண்மையை ஆராய்ந்து, வெளிப்படையான தரவுகளை வெளியிட்டு வருகின்றோம் என்றும் கூறியுள்ளது. இதனிடையே ஹசாரா பகுதியில் நேற்று மீண்டும் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.