தூய்மை நகரங்களின் பட்டியலில் தமிழ்நாடு பின் தங்கியிருப்பதற்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்து இது தொடர்பாக திங்கட்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, திடக்கழிவு மேலாண்மை பொது கழிப்பிடங்களின் தூய்மை, தெருக்களில் அசுத்தம் போன்றவை பற்றி மக்களால் அளிக்கப்பட்ட புகார்கள் மற்றும் அதன் மீது ஊராட்சி அமைப்புகள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி ஒரு ஆய்வினை மேற்கொண்டு அதன் அடிப்படையில் இந்தியாவில் உள்ள தூய்மை நகரங்கள் பற்றி அறிக்கையின் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதில் பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களுக்கு இடையேயான தூய்மை நகரங்கள் போட்டியில் மொத்தம் 45 நகரங்கள் இடம் பெற்றதாகவும் அதில் மதுரை 45 வது இடத்திலும், சென்னை 44 வது இடத்தில் கோயம்புத்தூர் 42 வது இடத்தில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் தெருக்களில் குப்பை அகற்றப்படாமை போன்ற அசுத்தம் குறித்த அளிக்கப்படும் புகார்கள் மீதான சென்னை மாநகராட்சி நடவடிக்கைகளில் திருப்தி இல்லை என பொதுமக்கள் கூறியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட 100 உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடையேயான போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு உள்ளாட்சி அமைப்பு இடம்பெறவில்லை எனவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. திமுக அரசின் அலட்சிய போக்கு காரணமாகவே தமிழ்நாடு இந்த அளவிற்கு பின்தங்கி இருக்கிறது. இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தனிக்கவனம் செலுத்தி தூய்மையில் சிறந்த தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.