ஆதிபுருஷ் டீசரில் இந்துமத உணர்வுகளைப் புண்படுத்தும் காட்சிகள் இடம்பெற்று இருப்பதாக மத்தியப்பிரதேச எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார். பாகுபலி-2 திரைப்படத்துக்குப் பின் சாஹோ, ராதே ஷ்யாம் போன்ற படங்களில் பிரபாஸ் நடித்தார். பாகுபலி-2 திரைப்படத்துக்கு அடுத்து பிரபாஸ் நடிக்கக்கூடிய அனைத்து படங்களும் இந்தியிலும் வெளியாகும் விதத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது. தன்ஹாஜி திரைப்படத்தை இயக்கிய ஓம்ராவுத் இயக்கத்தில் ஆதிபுருஷ் எனும் 3டி படத்தில் பாலிவுட் நடிகர் சயிப் அலிகானுடன் இணைந்து பிரபாஸ் நடிக்கிறார்.
கடந்த 2021 பிப்ரவரியில் படப்பிடிப்பு துவங்கியது. ஹிந்தி, தெலுங்கில் உருவாகும் இந்த படம் தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளில் டப் செய்யப்பட்டு 2023 ஜனவரி 12ல் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் ஆதிபுருஷ் திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியாகியது. இலங்கைக்குச் சென்று சீதாவை மீட்கும் ராமரின் கதையான இந்த திரைப்படம் முழுக்க கிராபிக்ஸ் பாணியில் உருவாக்கப்பட்டு உள்ளது.
எனினும் இதன் விஎப்எக்ஸ்(vfx) தரம் குழந்தைகளுக்கான கார்டூன் தரத்தில் உள்ளதால் இணையத்தளத்தில் இந்த டீசர் கடும் விமர்சனங்களையும் கிண்டலையும் சந்தித்து வருகிறது. இந்த நிலையில் மத்தியப்பிரதேச மாநிலத்தின் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, டீசரில் உடன்பாடு இல்லாத காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இவற்றில் ஹனுமான் தோல் ஆடைகளை அணிந்து காட்சி அளிக்கிறார். இது போன்ற காட்சிகள் மத உணர்வுகளை புண்படுத்துகிறது. இதை நீக்கும்படி தயாரிப்பாளர் ஓம் ரவுத்துக்கு கடிதம் எழுதுகிறேன். எனினும் அவர் நீக்கவில்லை எனில், சட்ட நடவடிக்கையை பற்றி யோசிப்போம் எனத் தெரிவித்துள்ளார்.